Thursday, September 1, 2011

வேலூர் மாவட்டக் கோயில்கள்

வேலூர் மாவட்டக் கோயில்கள்-1

சோளிங்கர் வள்ளிமலை மேல்பாடி (750 அடி உயர மலைமீது உள்ளது கோயில்)


ஒரு “கடிகை நேரம், அதாவது ஒரு நாழிகை - (4 நிமிடங்கள்) மட்டுமே, இந்த திருத்தலத்தில் இருந்தாலே மோட்சம் கிட்டிடுமாம்! அத்தனை பெருமை உடையது “கடிகாசலம்’ என்று அழைக்கப்படும் சோளிங்கர்.

*சோளிகங்கர்: தொண்டைநாட்டுத் திருப்பதிகள் இருபத்திரண்டாவது தலமாகவும், 108 திவ்விய தேசங்களில் 95-வதாகவும் விளங்குகிறது. சோளிங்கர் திவ்வியத் தலம், திருமங்கை யாழ்வாரும் பேயாழ்வாரும் மங்களாசாஸனம் அருளியுள்ள தலம். இராமனுஜர், தமது வைணவக் கோட்பாடுகளைத் தழைக்க செய்ய, நியமித்த எழுபத்து நான்கு சிம்மானங்களில் சோளிகங்கர் திருத்தலமும் ஒன்றாகும். தொட்டாச்சாரியர் எனும் ஆசாரியர், இந்தத் திருத்தலத்தில் அவதரித்தவர். அவரது வம்சத்துவர்களே, இத் திருக்கோயில் வழிபாடுகளை வழிநடத்திச் செல்கின்றனர்.

* கடிகைக்கோட்டம்: சோழன் கரிகால் பெருவளத்தான் காலத்தில் சோழநாடு 48 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அப்போது இப்பகுதிக்கு கடிகைக்கோட்டம் என்ற பெயர் இருந்ததாம். சோழநாட்டைப் போலவே வளம் மிகுந்து காணப்பபடுவதால் சோழசிம்மபுரம் என்றும் அழைக்கப்பட்டது. நாளடைவில் அதுவே சோளிங்கபுரம் என்று மருவி, சோளிங்கர் என்றே தற்போது அழைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் வாலாஜாப்பேட்டைக்கு வடக்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது. சோளிங்கர். சோளிங்கர் நகருக்கு இரண்டு கி.மீ. தொலைவில் உள்ள கொண்டபாளையம் எனுமிடத்தில் 750 அடி உயரம் கொண்ட மலை மீது அமைந்துள்ளது திருக்கோயில் 1305 படிகள் ஏறிச்சென்று, அங்கு சேவைசாதிக்கும் யோகநரசிம்மரின் அருளைப் பெற்றிடலாம். வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் இரண்டு திருச்சுற்றுக்களும் கொண்டுள்ள அழகிய கோயில். பொதுவாகப் பெருமாள் கோயில்களில் மூலவரின் கருவறையிலேயே, உற்சவத் திருமேனிகளையும் வீற்றிருக்கச் செய்வர். ஆனால் சோளிங்கரில் மட்டும் யோக நரசிம்மர், மூலவர் மட்டுமே,கிழக்கு நோக்கியபடி, சிம்ம சோஷ்டாக்ருதி விமானத்துடன் கூடிய கருவறையில் நமக்கு சேவை சாதிக்கிறார். சானக்ராம மாலை அணிந்த கோலம். உற்சவர் பக்தவத்சலர், சுதாவல்லி, அமிர்தவல்லி எனம் தனது இருதேவியருடன் , அடிவாரத்திலிருந்து இரண்டு கி.மீ.தொலைவில் தனிக்கோயில் கொண்டுள்ளார் அங்கு அமிர்தவல்லித் தாயார் தனித்தனி சந்நதி கொண்டுள்ளார். அமிர்த தீர்த்தம், பிரம்மதீர்த்தம், ஆகியவை பக்தவச்சலர் கோயில் அருகில் உள்ளன.
மூலவர் யோக நரசிம்மசுவாமி சங்கு சக்ரதாரியாக நான்கு கரங்களுடன், இருகால்களும் யோகசானத்தில் மடித்து
அமர்ந்தபடி யோகப்பட்டையுடன் காட்சி தருகிறார். விசுவாமித்ரர், ஒரு கடிகை நேரம் இம்மலையில் இருந்து இத்தலத்து இறைவனை வழிப்பட்டு பிம்மரிஷி பட்டமும் பெற்றிட்டார். பகத்ப் பிரகலாதனுக்கு காட்சி தந்த நரசிம்ம அவதார திருக்கோலத்தைத் தாங்களும் கண்டு ஆனந்திக்க வேண்டுமென வசிஷ்டர், காசியபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், பாரத்துவாஜர் ஆகிய முனிசிரேஷ்டர்களோடு, விசுவாமித்திரமுஞூ இத் திருத்திலத்தல் தவமிருந்தார். ராமனின் அவதார நோக்கம் நிறைவேறிய பின்னர். அவரோடு தானும் உடன் வருவதாகக் கூறிய ஆஞ்சநேயரும், இந்தத் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். கடிகாசலத்தில் தவம் மேற்கொண்டிருந்த சப்தரிஷிகளும் தீராத தொல்லை கொடுத்து வந்தனர். காலன், கேயன் எனும் இரு அரக்கர்கள், அவர்களை சம்காரம் செய்வதற்காக ஆஞ்சநேயர், எம்பெருமானின் சங்கு சக்கரங்களை வேண்டிப் பெற்று அவற்றில் துணையோடு, அவ்விரு அரக்கர்களையும் அழித்தார். மகரிஷிகள் எழுவரின் தவத்தினை மெச்சிய திருமாலும், திருக்கடிகைக்கு எழுந்தருளி நரசிம்ம மூர்த்தியாகக் காட்சியளித்தார். ஆஞ்சநேயரும் நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்டு ஆனந்தத்தோடு, சங்கு சகரதாரியாகவே,பெரியமலைக்கு எதிரில் யோக ஆஞ்சநேயராக அமர்ந்துவிட்டார். சின்னமலையில் அமர்ந்தபடியே, இங்கு என்னை சேவிக்க வரும் பக்தர்களின் குறைகளைப் போக்குவாயாக என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார். பில்லி, சூனியம் ஆகியவற்றால் உள்ள பிரம்மதீர்த்த்தில் நீராடி மலைமீது அமர்ந்து அருள்பாலிக்கும் யோகநரசிம்மரையும், யோக ஆஞ்சநேயரையும் சேவித்தால் நோய்கள் நீங்கப் பெறலாம். என்பது நம்பிக்கை. * தக்கான் குளத்தில் வரதராஜப்பெருமாள். தொட்டாசரியார், ஆண்டுதோறும், காஞ்சிபுரம் சென்று வரதராஜப்பெருமாளை சேவித்துவருவதை வழக்கமாகக் கொண்டவர், மூப்பு காரணமாக அவரால் காஞ்சிபுரம் வரை பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது பெரிதும் வருந்தினார். அப்போது, ஒரு நாள், இங்குள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்தபடி, காஞ்சி வரதராஜப்பெருமாளையும், அவரது கருடசேவையையும் பற்றி சிந்தித்தபடி இருந்தார். அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கருடவாகனத்தில், வரதராஜப்பெருமாள், சர்வாலங்கார பூஷிதராக, தக்கான் குளத்தின் கரையிலேயே தொட்டாச்சாரியாருக்கு காட்சி தந்தார். இன்றும்,காஞ்சிபரம் வரதராஜர் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள், பெருமாள்,கருடராரூடராக சோளிங்கர் தக்கான் குளத்திற்கு எழுந்தருளுகிறார். இந்தக் குளத்தில் நீராடினால், பிரம்மதோஷம் கூட நீங்கும் என்பது ஜதிகம், இங்கு தானதர்மம் நாளன்று இந்த மலையை கிரிவலம் வருவது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் என்று தலவரலாறு கூறுகிறது. பெருமாள் மலையைத் தவிர,சோளிங்கர் நகரின் உட்பகுதியில் சோளபுரீசுவரர் திருக்கோயிலும் உள்ளது. 5 கல்வெட்டுகளைக் கொண்டே இந்த சிவாலயத் திருமேனி, சுயம்பு லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

* வள்ளிமலை: வள்ளிக்கிழங்கு தோண்டி எடுத்த இடத்தில் மகாலட்சுமியின் அவதாரமாக, மான் வயிற்றில் பிறந்தாள் வள்ளி. நம்பிராஜன் எனும் வேடுவர் தலைவன் அவளை, வள்ளிக்கிழங்குகளிடையே கண்டெடுத்து, வள்ளி என்ற பெயரும் சூட்டி அன்போடு வளர்த்தான். இதெல்லாம் நடைபெற்றது வள்ளிமலையில்தான். அன்று அருணகிரிதார் ஆணித்தரமாகக் கூறியுள்ளார். வேலூர் மாவட்டத்தின் எல்லையில். ஆந்திர மண்ணைத் தொட்டவாறு அமைந்துள்ளது இந்தக் குன்று பெண்ணையாற்றின் கரையில் திருவலத்திற்கு வடக்கில் 16 கி.மீ தொலைவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை. வனத்துறை, தொல்லியல் துறை ஆகிய மூன்று துறைகளின் ஆளுமைக்குட்பட்டது இந்த மலை மற்றும் கோயில், தாழக்கோயில் ஒன்றும், மலைக்கோயில் ஒன்றும் இங்கு உள்ளன. மலைக்கோயிலைச் சென்றடைய 444 படிகளைக் கடந்திட வேண்டும். குகைக்கோயில் அது. தாழக்கோயிலில், ஐந்து நிலை ராஜகோபுரம்,விநாயகர் சந்நதி முதலில் உள்ளது. கருவறையில் ஆறுமுகசுவாமி எழுந்தருளியுள்ளார். மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதையில் சரவணப் பொய்கை உள்ளது. இதனருகில் தான் வள்ளி கோயில் உள்ளது. புடைப்புச் சிற்பமாக கவண்வீசும் கயிற்றை ஏந்தியபடி நின்ற கோலத்தில் ஆலோலம் பாடும் பாவனையில் வள்ளி காட்சி தருகிறாள். முருகப்பெருமானின் வேண்டுகோளுக்கிணங்க, வள்ளியை அச்சுறுத்திய யானையாக வந்த பிள்ளையார் அப்படியே மலை வடிவில் சமைந்து விட்டாராம். அக்குன்று இன்று கணேசகரி என்று அழைக்கப்படுகிறது. பிரார்த்தனை ஈடேற சிதறுகாய் உடைப்பது இங்கு மரபு ஆகி உள்ளது. கி.பி.816ம் ஆண்டு கல்வெட்டு ஒன்று இங்குள்ள சமணர் குகையில் உள்ளது. வர்த்தமானர்,பார்சுவநாதர், பத்மாவதி ஆகியோரது உருவங்களும் காணத்தக்கவை.


* மேல்பாடி: போர்க்காலத்தில் படைவீரர்கள் தங்கிய இடம்தான் மேல்பாடி பொன்னை ஆற்றின் மேல்கரையில் உள்ள தலம் இது. வாலாஜாப்பேட்டைக்கு வடக்கே 17 கி.மீ. தொலைவில் உள்ளது. முல்லை நிலத்தில் பல தலங்கள் “பாடி’ என்ற சொல்லை கொண்டு அமைந்துள்ளன. பாடி என்பது படைவீட்டைக் குறிக்கும். கந்தபுராணம் புகழ்ந்து பாடும் தலம் இது. அரிஞ்சிகை ஈசுவரம் என்று அழைக்கப்படும் ஒரு கோயிலும் சோமநாததேசுவர ஆலயம் ஒன்றும் இங்கே அமைந்துள்ளன. சோமநாதீவரர்,தபசுகிருதாம்பாள் கிழக்கு நோக்கிய சந்நதிகளில் எழுந்தருளியுள்ளனர். சப்தமாதர் சிலைகள், உள்சுற்றில் உள்ளன. சோமநாதீசுவரர், தபசுகிருதாம்பாள் கிழக்கு நோக்கிய சந்நதிகளில் எழுந்திருளியுள்ளனர். சப்தமாதர் சிலைகள் உள்சுற்றில் உள்ளன. “சோளந்திரசிங்க ஈசுவரமுடைய மகாதேவர் கோவில் என்று கல்வெட்டுகள் குறிப்பிடுவது சோமநாதீசுவரைத்தான். * அருஞ்ஜயேசுவரம் மேல்பாடியில் கலைநயம் மிக்கதோர் ஆலயமாக நம் கவனத்தைக் கவருவது அருங்ஜேயேசுவரம் என்றழைக்கப்படும் கற்கோயில்தான் சோழீசுவரர் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ராஜாராஜ சோழனின் பாட்டனாகிய ஆற்றூர்க்குஞ்சிய அருஞ்ஜய சோழனின் நினைவாக அவனது பேரனால் கட்டப்பட்ட கோயில் இது. * நாக யக்ஞோபவீத கணபதி, பரம்பையே பூணூலாக்கி அணிந்துள்ள அற்புதவிநாயகரின் திருக்கோலம் ஒன்றை மேலப்பாடியில் காணமுடிகிறது. நாகயக்ஞோப வீத தாரணரான கணபதி அரிஞ்சிகை ஈஸ்வரத்தில் கோஷ்டத்தல் வீணாதார தட்சிணாமூர்த்தியை காணமுடிகிறது. கிரீவத்தின் நான்குபுறமும், கருங்கல்லினால் ஆன பெரிய நந்திகள் சப்தஸ்தானத்து ஏமூர் கோயில்களையும் எசாலம் ராமநாதீசுவரர் கோயிலையும் நினைவூட்டுகின்றன. ஒரு கால பூஜையாடு திருப்தி கொண்டுள்ளார் திரு அரிஞ்சிகை ஈச்சுரத்து மகாதேவர்.

* பொன்னை: மேல்பாடி வரை வந்த நாம் பொன்னையாற்றின் கரையில் சுயம்புலிங்க மாக எழுந்தருளியுள்ள மகாதேவரை தரிசிக்காமல் போக முடியுமா! மேல்பாடிக்கு வடக்கே 7 கி.மீ. பயணித்து பொன்னை என்ற தலத்தை அடையலாம். இதுவே தமிழகத்தின் எல்லையாகவும் அமைகிறது. அடுத்து, பெருஞ்காஞ்சியில் சந்திப்போம். அதுவும் வேலூர் மாவட்டக் கோயில்தான்!


வேலூர் மாவட்டக் கோயில்கள்-2




கயிலையில், உமையம்மையும், மகேசுவரனும் ஏகாந்தமாய் இருந்த வேளையில், நிகழ்ந்த திருவிளையாடல்கள் எத்தனை எத்தனையோ!
ஒரு சமயம், உமையவள் விளையாட்டாக சிவபெருமானின் இரு கண்களையும், தனது கரங்களால் பொத்தினாள். அவ்வளவுதான்! உலகமே இருண்டு நிலை தடுமாறியது. பருவங்கள் மாறின! பசுவினங்கள் மிரண்டன! தேவர்களும் மாந்தர்களும் அஞ்சி பதைபதைத்தனர். ஒரு கணம் ஈசனின் பார்வையிலிருந்து விலகியதன் விளைவு இத்தனை விபரீதங்களா...!
அதற்குக் காரணமான அன்னையைப் பிரிந்திட முடிவு செய்தான் முக்கண்ணன். உமையம்மையின் தவறுக்கு பிராயச்சித்தமாக, பூவுலகம் சென்று தன்னை நோக்கி தவமிருக்குமாறு ஆணையிட்டான். ஆணையை அப்படியே சிரமேற்கொண்ட தேவி, பூவுலகம் நோக்கிப் புறப்பட்டாள். பாலாற்றங்கரையில், சப்தரிஷிகளும் ஆசிரமம் அமைத்து, தவமிருந்து வருவதைக் கண்டாள். அங்கே கௌதம மகரிஷியிடம் தீட்சை பெற்று, சிவபூஜை செய்யத் துவங்கினாள். செல்லுமிடமெல்லாம், ஓர் சிவலிங்கத்திருமேனியை ஸ்தாபித்துப் பூசனை செய்ய முற்பட்டாள். அவளது பயணம் நெடியது என்பதை அவள் அறியாதவள் அல்ல! அதனால்தான், கம்பா நதி தீரத்தை அடையும் வரை பொறுமை காத்து, கடந்து செல்லும் பாதையெல்லாம் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூசனையும் செய்தாள். பாலாற்றின் வடகரையிலும் தென்கரையிலும், இப்படிப் பெருமைபெற்ற புண்ணியத் தலங்கள் பல, முக்தித் தலங்களாகவே அவை நம்மை பிரமிக்க வைக்கின்றன.
அப்படி பாலாற்றின் வடகரையில் அமைந்த தலம்தான் காவேரிப்பாக்கம். வேலூர் - சென்னை நெடுஞ்சாலையில் முக்கியமான சந்திப்பு இது. சோழ மன்னன் குலோத்துங்கன், பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆகியோரது ஆட்சிக்குட் பட்டிருந்ததை, கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.
வேலூர் - சென்னை நான்கு வழி நெடுஞ்சாலைக்கு வடக்கே சற்று விலகியுள்ளது காவேரிபாக்கம். இங்கே, ஊருக்குள் நுழைந்ததும் நாம் காண்பது கொங்கணீசுவரர் திருக்கோயிலும், சுந்தர விநாயகர் திருக்கோயிலும்தான்.
முக்தீசுவரர் திருக்கோயில்தான் இங்கே பிரதானமான சிவாலயம். ஊருக்குள்ளே விசாரித்துச் செல்ல வேண்டும். அழகிய மூன்று நிலை ராஜகோபுரமும், அதன்மீது ஐந்து கலசங்களும், முகப்பில் "சிவசிவ' என்ற எழுத்துகளோடு சிவலிங்கத் திருமேனியும் ஒளிவிளக்காய் மிளிர்ந்திட, யாரோ புண்ணியம் தேடிக் கொண்டுள்ளனர்.
ஒரே ஒரு பிராகாரமும், 16 கால் கல்யாண மண்டபமும் கொண்டுள்ள அழகிய திருக்கோயில் இது. துவார விநாயகரும், முருகப் பெருமானும் இருபுறமும் கொலுவிருக்க, சுயம்புலிங்கத் திருமேனியாக முக்தீசுவரர் எழுந்தருளியுள்ளார். கிழக்கு நோக்கிய சன்னதி.
தெற்கு நோக்கிய சன்னதி கொண்டு, அலங்கார வல்லியாக அன்னை அருள்பாலிக்கிறாள். சோழர் காலத்துக் கட்டுமானம் கருவறையிலும், அதன் துவிதள விமானத்திலும் பளிச்சிடுகிறது.
ஊரின் மறுபகுதியில் அபய வரதராஜப் பெருமாள் திருக்கோயில் உள்ளது. நீளாதேவி, ஸ்ரீதேவி சமேதராக சேவை சாதிக்கிறார் அபயவரதர்.

கொண்டாபுரம்
பார்வதி தேவி, சதாசிவத்தை சிந்தனையில் கொண்டு, கம்பா நதியை நோக்கி வரும் பாதையில், சிவத்தின் ஐந்து நிலைகளையும் ஒன்றாக்கி பஞ்சலிங்கேசுவரர் திருமேனியை நிறுவிய தலம், கொண்டாபுரம். கம்பா நதிக்கரையில் தவம் இயற்றுவதற்கு முன்பு இத்தலத்தில் எழுந்தருளி, தனது திருக்கரங்களால் பஞ்சலிங்கேசுவரரை எழுந்தருளச் செய்வித்ததால் பஞ்சலிங்ககேசுவரர் எனும் திருநாமம் ஏற்பட்டது. அருகிலேயே சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும் உள்ளது.
"கொண்டாபுரம்' காவேரிப் பாக்கத்திற்குட்பட்ட பகுதியேதான்.

ஒச்சேரி
காவேரிப்பாக்கத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது ஒச்சேரி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்கோயில் ஒன்று இங்கே உள்ளதை, எவரும் கண்டுகொள்ளாதிருப்பது வேதனைக்குரிய விஷயம்.
சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளதால் சுயம்புநாதர் என்றே ஈஸ்வரன் அழைக்கப்படுகிறார். கருவறை விமானத்தைச் சுற்றி அஷ்டதிக் பாலர் சுதைச் சிற்பங்கள் பொலிவிழந்து காணப்படுகின்றன. கருவறையின் நான்கு முனைகளிலும், நந்திதேவருக்கு மட்டும் சுண்ணாம்பு பூசி தங்கள் கடமையை முடித்துக் கொண்டுவிட்டனர் பக்தர்கள்.
கிழக்கு நோக்கியபடி சுயம்புநாதர் எழுந்தருளியுள்ளார். அன்னை தெற்கு நோக்கி சன்னதி கொண்டுள்ளார். ஒரு கால பூஜைத் திட்டத்திற்குட்பட்ட கோயில் இது.
ஒச்சேரி, மிகவும் பழமை வாய்ந்த தலமாக இருந்ததை இங்குள்ள வரதராஜப் பெருமாள் திருமேனி எடுத்துக் காட்டுகிறது. அவருக்குரிய இடம், இடிபாடுகளுக்குள்ளாகி, கோதண்டராமசுவாமி திருக்கோயினுள்ளே குடியேறியுள்ளார் பெருமாள். ஊரில் பட்டாசாரியார் எவருமில்லாததால், சுயம்புநாதர் திருக்கோயிலில் கடமையாற்றும் சிவாச்சாரியாரே வரதராஜரையும் கவனித்துக் கொள்கிறார்.
வரதராஜரின் கம்பீரமான ஆறடி உயரத் திருமேனியின் அழகில் கூடவா எவரும் மயங்கவில்லை? அத்தனை அழகு! அவ்வப்போது திருமஞ்சனம் செய்வித்து, அலங்காரப் பிரியருக்கு, மாலையும் பீதாம்பரமும் அணிவித்துப் பார்க்கக் கோடிக் கண் போதாது!
இப்போதைக்கு சிவாச்சாரியார், அந்தப் புண்ணியத்தை தேடிக் கொண்டுள்ளார்.

கரிவேடு
ஒச்சேரியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது கரிவேடு. திரிபுவன வீரகண்ட கோபாலன் காலத்துக் கல்வெட்டு, இதன் வரலாற்றுச் சிறப்பைப் பறை சாற்றுகிறது.
திருமாலுக்கு அருள்புரிந்த எண்குணத்தீசன், இங்கு அரிபிரசாத ஈசுவரர் என்று திருநாமங் கொண்டுள்ளார். சுயம்புலிங்கத் திருமேனி.
அறம் வளர்த்த நாயகியாக தர்ம சம்வர்தனி என்ற பெயரோடு எழுந்தருளியுள்ளாள் அன்னை. பாலாற்றின் வட கரையில் அமைந்த அற்புதத் திருத்தலங்களுள் கரிவேடு தனிச் சிறப்பு கொண்டது.

வேகா மங்கலம்
கரிவேடுக்குத் தெற்கில் பாலாற்றையொட்டி அமைந்த மற்றொரு தலம் வேகாமங்கலம். உலகம் முழுதும் வெந்தழித்திட்ட நிலையில், வேகாது நின்றதால் இத்திருத்தலம் வேகாமங்கலம் எனப்பெயரோடு நிலைத்தது.
பரசுராமர் இறைவனை பூசித்ததால், பரசுராம ஈசுவரர் என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். திருக்கோயிலின் உள்ளே கயிலாசநாதருக்கும் தனிச் சன்னதி உள்ளது.
காசிவிசுவநாதர் - விசாலாட்சி ஆலயம் ஒன்றும், பச்சையம்மன் திருக்கோயிலும், வேகாமங்கலத்தில் தரிசித்திட வேண்டிய பிற கோயில்கள்.

மாமண்டூர்
வேகா மங்கலத்திற்கு மிக அருகில் சந்திரமௌலீசுவரர் அருள்பாலிக்கும் மாமண்டூர் உள்ளது.

களத்தூர்
கரிவேடு களத்தூர் என்று, கரிவேடுடன் சேர்ந்து அழைக்கும் களத்தூர், நெடுஞ்சாலைக்குத் தெற்கில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பாலாற்றின் வடகரையில் உள்ள திருத்தலம் களத்தூர். கழனிகளிடையே நெளியும் பாதையில் சென்று, இங்குள்ள ஏகநாதர் திருக்கோயிலைச் சென்றடைய வேண்டும்.
விஜயநகர, சோழ, பல்லவ பாணிகளைக் கொண்டு கட்டப்பட்ட இந்தத் திருக்கோயில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது. பராமரிப்பில் மிகவும் பின்தங்கி உள்ளது. நுழைவாயிலிலிருந்து, கருவறை வரையில், புற மண்டபம், முக மண்டபம், அந்தராளம் என்று அத்தனை அமைப்புகளையும் கொண்டது.
அரவின் படம் தலையை அணி செய்திட, கருவறையின் முன்னே உள்ள துவாரபாலகர், பல்லவர் காலத்துச் சிற்பங்கள். இருவரும் வெவ்வேறு அமைப்பைக் கொண்டவர்கள்.
"தத்தை' என்பது கிளியைக் குறிக்கும் சொல் ஆகும். மலையாள மொழியிலும் கிளியை "தத்தை' என்றே கூறுவர். வியாச முனிவரக்கு, கிருதாசி எனும் கந்தர்வப் பெண்ணிடம் கிளி உருவில் பிறந்தவரே சுகர். சுகப் பிரம்மம் என்று, பிற்காலத்தில் தனிச் சிறப்புப் பெற்றவர்.
சுகமுனிவர் பூசித்ததால் சுகநாதேசுவரர், தத்தேசுவரர் என்ற திருநாமம் கொண்டுள்ளார் ஈசுவரர். இந்த புராணத்தை விளக்கும் அழகிய புடைப்புச் சிற்பம் ஒன்று, கருவறையின் பின்னே மகரத் தோரணத்திறிகடையே அழகூட்டுகிறது. கிளி உருக்கொண்ட சுகர், ஒரு சிவலிங்கத்தை தேரில் வைத்து இழுப்பது போல சித்திரிக்கப்பட்டுள்ளது, தல புராணத்திற்கு வலுவூட்டுகிறதாகும்.
"சௌந்தரவல்லி' என்ற திருநாமத்துடன் அன்னை எழுந்தருளியுள்ளாள். பிற்காலத்தில் முகமண்டபத்திற்குள்ளேயே அமைக்கப்பட்ட சன்னதி இது.

பிரம்ம தேசம்
களத்தூருக்குத் தெற்கே விக்கிசிங்க சதுர்வேதி மங்கலம் என்று முன்பு அழைக்கப்பட்ட பிரம்ம தேசம் உள்ளது. பாலாற்றின் தென்கரையில் உள்ள தலம்.
கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மனான ராசேந்திரனும், அவனது துணைவி வீரமாதேவியும் உயிர் துறந்த இடம் இது. அகத்தீசுவரர் அருள்பாலிக்கும் திருத்தலம் இது.

பனப்பாக்கம்
பனைமரத்தை தலவிருட்சமாகக் கொண்ட மற்றொரு திருத்தலமாக விளங்குவது பனப்பாக்கம். வேலூர் - சென்னை நெடுஞ்சாலையில் முக்கியமான சந்திப்பு இது பாலாற்றின் வடகரையில் உள்ளது.
"புலியும் மயிலும் பூசித்த' திருத்தலம் இது என்பதைக் குறிக்க, கருவறை விமானத்தில் ஈசனை பூசித்தபடி புலியும் மயிலும், இருபுறம் பணியும் சுதைச் சிற்பம் அழகூட்டுகிறது. ஐந்து நிலை ராஜகோபுரமும், பிராகாரமும் கொண்டுள்ள அழகிய திருக்கோயில்.
"மயூரநாதர்' என்றே ஈசன் அழைக்கப்படுகிறார். மயூரபுரி, இந்திரபுரி, பிரம்மபுரி, புலியூர், திருத்தாலபுரி, கய்யாணமாவூர் என்று பல பெயர்கள் பனசைப்புராணத்தில் இடம் பெற்றுள்ளன. கல்வெட்டுகள் "புலியப்பர்' என்றே இறைவனை குறிப்பிடுகின்றன.
நந்திதேவர், இந்திரன், அகத்தியர், பிரம்மா ஆகியோர் பூசித்து அருள் பெற்ற தலம். சௌந்தரவல்லி என்ற திருநாமத்துடன் அன்னை தனிச் சன்னதி கொண்டுள்ளாள்.
காஞ்சிபுரத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது பனப்பாக்கம். அரக்கோணம் - திருமால்பூர் வழியே சென்றடையலாம்.

சிறுகரும்பூர்
"சிறுதுரும்பும் பல் குத்த உதவும்' என்பர். இங்கே சிறுகரும்பூரில், சுவை நயம் மிக்க தோர் ஆலயம், தொல்லியல் துறை கண்காணிப்பில் உள்ளது.
முப்புரம் எரித்த முக்கண்ணனே, திரிபுராந்தகராக அருள்பாலிக்கும் திருத்தலம் சிறுகரும்பூர். விஜயநகரத்துச் சிற்பக்கலை மிளிறும் அற்புதச் சிற்பங்கள் கொண்ட திருக்கோயில் கஜாந்தகர், பிட்சாடனர், உமாசகிதர், சந்தியா தாண்டவமூர்த்தி, கங்காதரர், பிரம்மா சிரச்சேத மூர்த்தி, விஷாபஹரணர், கௌரி பிரசாதர், அர்த்தநாரீசுவரர், கிருதார்ஜுனர், ஹரிஹரர், இலங்கேச அனுக்ரகர் என்று பல மூர்த்தங்களைக் கொண்டது.
அது மட்டுமல்ல, பதினொரு ருத்திரர்களையும், அஷ்ட திக்கு பாலகர்களையும், கருட நரசிம்ம யுத்தத்தையும் சிற்ப வடிவில் காணும் பேறு நமக்கு கிடைக்கிறது.
மகேந்திரவர்மன் நிறுவிய தாராலிங்க வடிவில் திரிபுராந்தகர் கொலுவிருக்க, பின் சுவரில் சோமாஸ்கந்தரின் புடைப்புச் சிற்பம் அழகூட்டுகிறது. அன்னை "அழகு காமாட்சி'யாக அருள்பாலிக்கிறாள்.
பிரம்மதேசத்திற்கு அருகிலேயே திரிபுராந்தகராக ஈசன் எழுந்தருளியுள்ள சிறுகரும்பூர் உள்ளது. "சரக்கொன்றை' தலவிருட்சமாக விளங்குகிறது.


வேலூர் மாவட்டக் கோயில்கள்-3

ஆம்பூர் குடியாத்தம் துத்திப்பட்டு

வேலூர் மாவட்ட உலாவில் வாணியம்பாடி, திருப்பத்தூர், பெரியபேட்டை, வேலகல்நத்தம், கொரட்டி ஆகிய தலங்களை தரிசித்துவிட்டு நம் பயணத்தைத் தொடர்கிறோம்.
ஆம்பூர்
பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள மற்றொரு திருத்தலம், ஆம்பூர். வாணியம்பாடிக்கு வடக்கே 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
பல்லவ அரசன் நிருபதுங்கர்மனின் 36வது ஆட்சியாண்டில் (கி.பி.885), அவனது பிரதிநிதியாக பிருதுவி கங்க அரையன் ஆட்சி செய்தான். அப்போது மூண்ட போரில் பலியானவர்களுக்காக எழுப்பப்பட்ட நடுகற்கள், இந்த ஊரை “ஆமையூர்’’ என்றே கூறுகிறது.
சோழர் காலத்திலும் (15ம் நூற்றாண்டில்) அவ்வூர் “ஆமையூர்’’ என்றே அழைக்கப்பட்டதை சிவாலயத்தின் மேற்குத் திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு உறுதி செய்கிறது. அப்போதெல்லாம் பாலாற்றில் கரைபுரண்டு வெள்ளமும், நீர் நிலைகளில் ஆமைகளும் நிரம்பி இருந்தததால் அப்பெயர் வந்திருக்கக்கூடும் என்பர் வரலாற்று ஆய்வர்.
பதினைந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் செங்கற்களால் கட்டப்பட்டிருந்த கோயிலை சோழர்கள் திருத்தியமைத்ததோடு “திருநாகீசுவரமுடையார்’ என்ற கல்வெட்டையும் பொறித்து வைத்துள்ளார்.
நாகீசுவரமுடையார், நாகேசுவரராகி, இன்றைக்கு “நாகரத்னசுவாமி’ யாகவும் பெயர் மாற்றம் கொண்டுவிட்டார். நாகதீர்த்தம், திருக்கோயிலினுள்ளே இபுருப்பதும், ஈசனும் நாகத்தையே தனது திருநாமத்தில் கொண்டுவிட்டதாலும், இது சர்ப்பதோஷ பரிகாரத் தலமாகக் கூறப்படுகிறது.
பாம்புப் புற்றொன்றில் முறைத்தெழுந்த திருமேனியானதால் நாகரத்ன சுவாமி என்று அழைக்கப்படுகிறார் போலும். கிழக்கு திசை நோக்கிய அழகிய கோயில், மூன்று நிலை ராஜகோபுரமும் இரண்டு உயர் சுற்றுகளும் கொண்டது. உள் சுற்றில் காளத்திநாதர், வழித்துணை நாதர் சன்னதிகளும், அறுபத்து மூன்று நாயன்மார்களும் இடம் பெற்றுள்ளனர்.
நடுநாயகமாக நாகரத்னசுவாமி எழுந்தருளியுள்ளார். கருவறையின் இருபுறமும், மகாமண்டபத்தில் பெரிய துவாரபாலகர் சிலைகள் இடம் பெற்றுள்ளன.
அண்டிவந்தோர்க்கெல்லாம் அபயமளிப்பவளாக, அன்னை “அபயவல்லி’ என்றே திருநாமங் கொண்டுள்ளாள். தனிச் சன்னதியில் நின்றகோலம். நான்கு திருக்கரங்கள் கொண்ட அழகுக் கோலம்.
விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள் சுற்றில் இடங்கொண்டுள்ளனர். பைரவர், நவகிரகங்கள் தனிச் சன்னதியாக உள்ளனர். இவை தவிர, பளிங்குக் கல்லினால் ஆன “ராமகிருஷ்ணர்’ திருமேனிக்கும் தனிச் சன்னதி ஒன்று அமைந்துள்ளது.
ஐப்பசி மாதம் உற்சவம் காணும் நாக ரத்தினசுவாமிக்கு நாள்தோறும் நான்கு கால வழிபாடு நடைபெறுகிறது.


சீனிவாசப் பெருமாள்
ஆம்பூரில் மேலகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது சீனிவாசப் பெருமாள் கோயில். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கூடியது. பலிபீடம், கொடிமரம், சொர்க்க வாசல் ஆகியவை கொண்டது. மகா மண்டபத்தின் முகப்பில் வெங்கடேசப்பெருமானும், வலப்புறம் தாயாரும், இடப்புறம் ஆண்டாளும் அழகிய சுதைச் சிற்பங்களாக உள்ளனர்.
கருவறையில் உள்ள பெருமாள், வாணியம்பாடிப் பெருமாளை விட உயரத்தில் சிறியவராக இருப்பினும், அழகு ஜொலிப்பவர். உற்சவத் திருமேனிகளும் கருவறையில் உள்ளன. தாயார் தனிச் சன்னதி கொண்டுள்ளார். ஆம்பூரில் இவை தவிர காமாட்சியம்மன் திருக்கோயிலும், சாமுண்டீசுவரி திருக்கோயிலும் உள்ளன.

11 அடி உயர் ஆஞ்சநேயர்
11 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர், அதுவும் சனீசுவரரை காலால் மிதித்த கோலத்தில் காணப்படுகிறார். 1489ல், கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்த திருக்கோயில் உருவானதாக வரலாறு கூறுகிறது. அனுமனின் ஒரு கால் பதிந்த இடம் இது என்றும்; மற்றொரு கால் பதிந்த இடம் அருகில் உள்ள ஆனைமடுகு என்றும் கூறுவர். சனீசுவரனின் கர்வத்தை வாயுபுத்ரன் அடக்கியதால், சனியின் பார்வையால் சங்கடத்தில் ஆழ்வோர், ஆம்பூர் திருத்தலத்து ஆஞ்சநேயரை வழிபடலாம்!


துத்திப்பட்டு
ஆம்பூருக்கு வடக்கில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது துத்திப்பட்டு. “பிரதூர்த்தப் பட்டு’ என்று முன்னர் அழைக்கப்பட்டு இப்போது “துத்திப்பட்டு’ ஆகிவிட்டது. “பிரதூர்த்தன்’ யார்? அவனுக்கும் இந்த ஊருக்கும் என்ன தொடர்பு? அதுதான் தலவரலாறு!
ரோமச முனிவர் என்ற ஒரு மகரிஷி, இப்பகுதியில் பர்ணசாலை அமைத்துக் கொண்டு, தனது சீடர்களுடன் தவம் புரிந்து கொண்டிருந்தார்.
அப்போது பிரதூர்த்தன் என்ற அரக்கன், வேள்விகளைக் கலைத்திட அங்கு வந்தான். அதனால் சினம்கொண்ட ரோசமர், அவனைப் புலியாக மாறிட சாபம் கொடுத்தார். புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா? புலியாக மாறிய பிரதூர்த்தன், கானகத்தில் வாழ்கின்ற உயிரினங்களுக்குத் தொல்லை கொடுக்கத் துவங்கினான். கானகம் வாழ் முனிவர்கள் தேவேந்திரனிடம் சென்று முறையிட்டனர்.
முனிவர்களைக் காத்திட தேவேந்திரனும் புலியாக மாறி அரக்கனுடன் சண்டையிட்டான். அரக்கன் பலமே மேலோங்கிய நிலையில் அமரேந்திரன் அவன் மீது வஜ்ராயுதத்தை வீசினான். உயிர் துறக்கும் வேளையில், நல்ல புத்தியும் வந்தது அவனுக்கு. செய்த தவறை உணர்ந்தவனின் குற்றம் பொறுத்தருளுவதுதானே கடவுளின் கருணை! தேவர்களும் திருமாலை வேண்டினர்.
சங்குசக்ர கதாயுதபாணியாக பிரதூர்ததனுக்கும் காட்சி தந்தார் பெருமாள். அரக்கனுக்கு நற்கதி தந்த அதே இடத்தில் நிலை கொண்டு பூவுலகவாசிகளுக்கும் திருவருள் செய்திட வேண்டும் என்று கோரினர் முனிவர்களும் தேவர்களும். அவர்களின் அன்புக் கட்டளையை ஏற்றுக் கொண்டு எம்பெருமான் துத்திப்பட்டு தலத்தில் எழுந்தருளியுள்ளார். பிரமாண்ட புராணத்தில் சனத்குமார சம்ஹிதையில் இடம் பெற்றுள்ளது இத்திருத்தல வரலாறு.
பெரிய வெளிச்சுற்றுடன் கூடிய திருக்கோயிலை 45 அடி உயர ஐந்துநிலை ராஜகோபுரம் அழகு செய்கிறது. மூன்று கருவறைகளும், ஒரு முகமண்டபமும், 36 தூண்கள் கொண்ட மகா மண்டபமும் உள்ளன. மூலவர் கருவறை மேல், 18 அடி உயரம் கொண்ட தேஜோ விமானம் அழகு செய்கிறது.

பிந்துமாதவர்
ஆறடி உயரம் கொண்ட பெருமாள். தனது இரு தேவியரும் இருபுறமும் நின்றிட சேவை சாதிக்கிறார். இங்கே அவர் “பிந்துமாதவராயப் பெருமாள்’ என்று திருநாமம் கொண்டுள்ளார். வேணிமாதவர், பிந்துமாதவர் ஆகிய பெருமாளை சேவிக்க பிரயாகை செல்ல வேண்டாம். தமிழ்நாட்டிலேயே க்ஷீரநதி (பாலாறு) தீரத்திலேயே என்னை சேவிக்கலாம் என்று கூறுவது போல, சதுர்புஜங்களுடன், சங்கு சக்கர கதாதரராகக் காட்சி தருகிறார். முத்தங்கி சேவையில் அவரைக் காண கோடிக்கண்கள் வேண்டும்.
உற்சவத் திருமேனிகள் தேவியர் இருவரும் பெருந்தேவி, குமுதவல்லி என்று திருநாமங் கொண்டுள்ளனர்.

பெருந்தேவித் தாயார்
கருவறையை விட்டு வெளியேறி வெளிச் சுற்றுக்கு வந்து, தனிச் சன்னதி கொண்டுள்ள பெருந்தேவித்தாயாரை சேவிக்கிறோம். மறுபுறம் சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் சன்னதி. அருகிலுள்ள மகிழமரம் தலமரமாகத் திகழ்கிறது.
நம்மாழ்வார், மணவாள மாமுனிகள், உடையவரோடு இத்திருத்தலத்தில் பெருமாள் எழுந்தருளக் காரணமாக இருந்த பிரதூர்த்தனுக்கும் சிலை உள்ளது.
வைகாசி விசாகத்தில் கஜேந்திர மோட்சம் ஐதிகத் திருவிழாவாக நடைபெறுகிறது. சங்கராந்தி அன்று, ரோமச மகரிஷி தவமியற்றி வந்த நிமிஷாசல மலையைச் சுற்றி உற்சவர் வலம் வருவார்.
விஜயநகர மன்னர்கள் பெருமளவில் திருப்பணி செய்துள்ளனர். ஏகஜதேவராயர், விஜயநரசிம்மராயர் திருப்பணிகள் குறிப்பிடத்தக்கவை.
ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசித் திருநாள், சொர்க்க வாசல் திறப்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

குடியாத்தம்
“குடியேற்ற நல்லூர்’ என்று அழைக்கப்பட்ட தலமே இன்று குடியாத்தம் ஆகிவிட்டது. குடியேறுவதற்கு நல்லூரான பகுதியே இன்று “நல்லூர்பேட்டை’ என்று அழைக்கப்படுகிறது. குடியாத்தம், காட்பாடிக்கு மேற்கே 25 கி.மீ. பேரணாம்பட்டு செல்லும் பேருந்துகள், நல்லூர்பேட்டை வழியே செல்கின்றன.
வன்னிமரத்தைத் தலமரமாகக் கொண்டதால், மிகவும் பழமையானதாகவும், அரிய தலவரலாறையும் கொண்டதாகவும் உள்ளது. “கரிப்பொதிக் காவலீசர்’ என்று பெயர் கொண்ட அவர் காலப்போக்கில் கருப்புலீசுவரராக்கப்பட்டுவிட்டார்.
சிவநேசன் என்ற வணிகன், மிளகு மூட்டைகளோடு சென்றபோது அவனது அச்சம் தவிர்த்திட துணையாக வந்து ஈசனின் திருவிளையாடல், தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

வழித்துணை நாயகன்
“நஞ்சுண்டகுடி’ என்ற தொண்டை நாட்டு நகரம். அங்கு வாழ்ந்து வந்தவன் சிவபக்தி மிகுந்த சிவநேசன் என்ற வணிகன். தனம் மிகுந்ததால் “தனபாலன்’ என்று அழைக்கப்பட்டான். நல்வழியில் பொருள் சேர்த்தவன். ஒரு சமயம் தென் திசையிலிருந்து மிளகு மூட்டைகளை வாங்கிக் கொண்டு, கிழக்குக் கரைப்பட்டினம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அந்திசாயும் நேரம், அடுத்த ஊரை அடைவதற்குள் இருள் சூழ்ந்திடும். இங்கேயே தங்கிவிடலாம் என்றெண்ணிடும்போது, கட்டிளங்காளையாக ஒரு வீரன் வாளேந்திய வண்ணம் குதிரையொன்றின் மீதேறி வரும் குளம்பொலி கேட்டது. சிவநேசன் திகைத்தான்! இந்நேரத்தில் இங்கே யார்?
நெற்றி முழுதும் திருநீறு அணிந்தபடி வாளைக் கையில் எந்தியபடி வந்த வாலிபன் சிவநேசனுக்கு, வழித்துணை நாயகன் மார்க்க சகாயராகவே காட்சி தந்தான். சிவநேசனை நெருங்கியபடி அவ்வீரன், “உனக்கு நான் துணையாக வருவேன்’ என்று கூறியபடிட இரவு முழுவதும் சிவநேசனுக்குத் துணையாக வந்தான்.
தன் அச்சம் தீர்த்திட வந்தவன் அந்த அரனே என்று கருதி, அடுத்து நெருங்கிடும் விரிஞ்சிபுரத்து வழித்துணை நாதருக்கு லாபத்தில் பாதிப்பங்கும் தந்திட மனத்தில் உறுதி கொண்டான் சிவநேசன்.
இரவு கழித்து வெள்ளி முளைத்தது. உடன்வந்த வீரனைக் காணாது திகைத்தான் சிவநேசன். அந்த வழித்துணைநாதரே தனக்கு துணையாக வந்தது கண்டு மெய்சிலிர்த்தான். தனது வர்த்தகம் முடிந்ததும் வழித்துணைநாதருக்கு தான் எண்ணியபடி காணிக்கையும் செலுத்திவிட்டு, குலம் தழைத்திட மகப்பேறு நல்கிட வேண்டினான்.
சோமவார விரதமிருந்த அவனுக்கு இறைவனருளால் ஒரு மகனும் பிறந்தான். “இனி உனக்கு இத்திருத்தலத்தில் பணி ஏதுமில்லை. பிறந்த நாடு உடனே புறப்படு!’ என்று கனவில் பேரொலி கேட்டது அவனுக்கு!

காட்டில் புலி!
இறைவனின் கட்டளையை ஏற்று சிவநேசன் குடும்பத்தோடு தன் பிறந்த நாடு நோக்கிப் புறப்பட்டான். வழியில் “செருகிரி’ என்ற மலை எதிர்ப்பட்டது. மலையடிவாரத்தில் கூடாரம் அமைத்து அந்த இரவைக் கழித்திட எண்ணினான். கூடாரத்தில் மனைவியையும் மகனையும் விட்டுவிட்டுப் பாறை மீதமர்ந்தபடி சிந்தனையில் ஆழ்ந்தான். அப்போது திடீரென அங்கே யானை ஒன்று பிளிறும் சத்தமும், அதனைத் தொடர்ந்து புலி ஒன்று அதனைத் துரத்தி வருவதையும் கண்டான். அங்கே வந்த புலியோ யானையை விட்டுவிட்டு கூடாரத்தினுள் புகுந்து, சிவநேசனின் குழந்தையைக் கவ்விக் கொண்டு சென்றுவிட்டது.
சிவநேசனும் அவனது மனைவியும் அதுகண்டு மூர்ச்சையாயினர். மயக்கம் தெளிந்த நிலையில் விழித்தபோது, குட்டியானை நின்ற இடத்தில் வேழமுகன் நிற்பதைக் கண்டார். ஆனைமுகத்தான் அவர்கள் முன்தோன்றி, “நீங்கள் பிறவிப்பயன் எய்திவிட்டீர்கள்! அதோ நிருதி மூலையில் உங்கள் குழந்தை பத்திரமாக உள்ளது. செல்க!’ என்று கூறினார்.
எந்தப் புலி அவர்களது குழந்தையை எடுத்துக் சென்றதோ, அது புலி போல் அல்லாது, பூனை தனது குட்டியை எவ்வாறு சிறிதும் காயமுறாமல் கவ்விச் சென்று, குழந்தையைக் கிடத்திவிட்டு, அதனருகில் அமர்ந்திருந்தது. தனது கால்களால் குழந்தையை வருடிக் கொண்டிருந்த வரிப்புலியைக் கண்டான் சிவநேசன்.மெய்சிலிர்த்தான்.
தன்னைத் தடுத்தாட்கொள்ள வேங்கை நாதனாக எழுந்தருளிய தேவனைப் போற்றினான். அம்மையப்பன் ரிஷபாரூடமாக அவர்களுக்குக் காட்சி தந்த அந்தத் திருத்தலமே குடியேற்ற நல்லூராக இன்று திகழ்கிறது.
கரிப்பொதிக்கு காவலாக வந்தவனே, இன்று கருப்புலீசுவரராக அருள்பாலிக்கிறார். அன்னையின் திருநாமம் சிவகாமசுந்தரி. ஐந்து நிலை ராஜகோபுரம் அழகுடன் மிளிர, உள்ளே நுழைந்ததும் கொடிமரத்தினடியில், தலவரலாற்றைச் சித்திரிக்கும் சுதைச் சிற்பங்களோடு ஆதிநாதர் எழுந்தருளியுள்ளார்.
வடமொழியில் பாலசாரச்த்துல்லீசர் என்று அழைக்கப்படுகிறார். ஆருத்ரா தரிசனம், பிரம்மோற்சவம் ஆகியன சிறப்பாக நடைபெறுகின்றன. நாள் தோறும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது.
திருக்கோயிலையொட்டிப் பாயும் ஆறு கண்டலநதி என அழைக்கப்படுகிறது.

1 comment:

  1. ஆஹா, அதி அற்புதமான புள்ளி விபரங்கள், அழகான தொகுப்பு, மிக்க நன்றி ! இப்பணியை ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவிபடுத்தினால் நன்றாயிருக்கும்.

    ReplyDelete